சுபவீ என்றொரு இயல்பான மனிதர்
- தாயப்பன் அழகிரிசாமி
'people will forget what you said
People will forget what you did,but
people will never forget
How are you mad them feel'
-MAYA ANGELOU
பெரியாரிஸ்ட் என்று தங்களை நம்பிக் கொண்டிருக்கும் சிலரை நான் கடந்து வந்திருக்கிறேன். ஒருவர் மூன்று விரல்களை மறைக்கும் அளவுக்கு, சுற்றிலும் கற்கள் பதிக்கப்பட்டு, நடுவில் பெரியார் இருக்கும் மோதிரத்தை அணிந்திருப்பார். ஒரு நாளில் நான்கு மணிநேரத்தை பார்ப்பனர்களை திட்டுவதற்காகவே ஒதுக்குவார், மீதமிருக்கும் இருபது மணி நேரத்தை தன் சுய ஜாதிப் பெருமையைப் பேசுவதற்காக ஒதுக்கிக் கொள்வார். மற்றொருவர் ஆகச் சிறந்த பெரியாரிய INTELLECTUAL. ஒருமுறை அவருடைய கருத்துக்கு எதிராக என் கருத்தை எழுதிவிட்டேன் என்பதற்காக வேறுபக்கம் திருப்பிக் கொண்ட தன் முகத்தை, அவர் இதுவரை என் பக்கம் திருப்பவை இல்லை! வேறொருவர், அவர் ஏசுவதை மாத்திரம் கடவுள்கள் கேட்க நேர்ந்தால், தங்கள் தோளில் தொங்கும் பூணூலை கழுத்தில் மாட்டிக்கொண்டு தொங்கிவிடுவார்கள்! என்ன ஒன்று, ‘தினமலர்’ வந்துவிட்டது என்று யாராவது சொன்னால் தான் காலையில் கண்களையே திறந்து பார்ப்பார்.
‘பெரியார்’ என்பது வறட்டு நாத்திகம் அல்ல தங்களுடைய அடையாளச் சிக்கலை சரிசெய்து கொள்ள எடுத்துக் கொள்ளும் முகமூடி அல்ல. அது ஒரு அரசியல் சொல்லாடலும் அல்ல. ஒரு கருத்தாக்கம் (IDEOLOGY) என்ற வரையறையில் கூட அதனை அடக்கிவிட முடியாது. அது ஒரு (WAY OF LIFE)வாழ்க்கை முறை. மதமோ கடவுளோ எந்த நிறுவனத்தையும் எப்போது எதற்காக எதிர்க்க வேண்டும் என்ற தெளிவு, பிறிதின் நோயை தன் நோய் போல் ஏற்கும் பாங்கு, புறம் பேசாமை, பதற்றமற்ற நிதானம், தான் சொல்வதை முதலில் தான் நம்புவது, நவீனம், சமூகம் சார்ந்த உழைப்பு, எல்லாவற்றிற்கும் மேல், தனக்குள் இருக்கும் தன்னை தயக்கம் இல்லாமல் வெளிக்காட்டக் கூடிய துணிவு அல்லது துறவு - இவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறை. புத்தர் சொல்லும் தம்மம் தழுவிய வாழ்க்கை முறை. சுபவீயிடம் இருந்து நான் எடுத்துக் கொண்டது இதைத்தான் - ‘பெரியாராக வாழ்வது’
ஜான் திவே (JOHN DEWEY) என்ற அமெரிக்கத் தத்துவவியலாளர், மற்றும் சமூகச் செயற்பாட்டாளரை இந்தியாவில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. டாக்டர்.அம்பேத்கருக்கு கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆசிரியராக இருந்தவர். டாக்டர்.அம்பேத்கர் தன்னுடைய ‘ஜாதியை அழித்தொழிக்கும் வழி’ நூலில் எழுதுவார், பேராசிரியர் ஜான் திவே என்னுடைய ஆசிரியர். அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டுள்ளேன்" திவே அவர்களை, டாக்டர்.அம்பேத்கரின் எழுத்துகள் மற்றும் பேச்சுகள் வழியாக அறிந்து கொள்வதை விட அவருடைய அரசியல் செயல்பாடுகளின் வழியாகவே உணர்ந்து கொள்கிறோம். மகத் குளப் போராட்டம், வட்ட மேசை மாநாடு, அரசமைப்புச் சட்டம் ஆகிய தன் அனைத்து செயல்பாடுகளின் வழியாகவும் திவே அவர்களை இந்திய சமூகச் சூழலுக்குள் பொருத்திப் பார்த்தார். திவே பேசிய அறம் என்பதை பவுத்தத்தோடு இணைத்து அதனை இந்து மதத்திற்கு எதிரான மக்கள் இயக்கமாக்கினார். சுபவீயின் எழுத்துகளில் அண்ணாவும் பேச்சுகளில் கலைஞரும், ஈ.வெ.கி.சம்பத்தும் வெளிப்பட்ட தருணங்களை விட செயல்களின் வழியே பெரியார் வெளிப்பட்ட தருணங்களே அதிகம்!
IRONY என்ற சொல்லின் பொருள் புரியாத வயதில், அடைமொழியில் உள்ள ‘புரட்சி’யை நாட்டிலும் கொண்டு வந்துவிடுவார் என்று சுபவீ நம்பியதால் எம்.ஜி.ஆரில் தொடங்கி, மார்க்சியத்தின் மீது கொண்ட ஈர்ப்பினால் கவிஞர் இன்குலாப், தமிழ்த் தேசிய அரசியல் வழியாகத் தோழர்கள் மணியரசன், தியாகு, ஈழ விடுதலைக்காக அய்யா நெடுமாறன், அய்யா அருணாசலம் என்று அவருடைய அரசியல் வழிகாட்டிகளுக்கான (MENTOR) தேடல் தொடர்ந்து கொண்டே இருந்திருக்கிறது. இதை, சுபவீயின் மீதான குற்றச்சாட்டாகவே, ‘அடிக்கடி தலைவர்களை மாற்றிக் கொள்கிறார்’ என்று சிலர் சொல்வார்கள். தமிழ்த் தேசியர்கள், இன்னொன்றையும் சேர்த்துச் சொல்வார்கள், ‘பெரியாரைப் போலவே.’
உலகத்தின் ஆகச்சிறந்த இசைக் கலைஞர் ‘பீத்தோவன்! அவர் எழுதிய புகழ்பெற்ற சிம்பொனிகளில் ஒன்று அவருடைய 3rd SYMPHONY. EROICA என்பது அதன் தலைப்பு. அன்றைய பிரெஞ்சுப் புரட்சியின் கதாநாயகன் நெப்போலியன். அவனால் இந்த உலகம் எதேச்சதிகாரத்திலிருந்து மீண்டு ஜனநாயகத்தை நோக்கி நடைபோடும் என்று பீத்தோவன் நம்புகிறார். அவன் மீது கொண்ட ஈர்ப்பினால் தன் EROICAவை நெப்போலியனுக்கு அர்ப்பணிப்போடு, (DEDICATION) தான் எழுதிய அந்த இசைக்கோர்வையின் தலைப்பில் எழுதுகிறார். உலக நிகழ்வுகள் மாறுகின்றன. நெப்போலியன் தன்னை சக்கரவர்த்தியாக(EMPEROR) முடிசூட்டிக் கொள்கிறான். நாடுகளைப் பிடித்து தன்னை ‘மாவீரனாக’ காட்டிக் கொள்ள ரத்தம் சிந்தும் போர்களில் ஈடுபடுகிறான். அவன் மீது தான் கொண்ட நம்பிக்கை சிதைக்கப்பட்ட கோபத்தில் பீத்தோவன், நெப்போலியனின் பெயரை அடித்து அழிக்கிறார், அந்தத் தாளை இரண்டாகக் கிழிக்கிறார். சில நாட்கள் கழித்து அந்தத் தாள்கள் ஒட்டப்பட்டு, வேறு ஒரு அர்ப்பணிப்போடு SYMPHONY இசைக்கப்படுகிறது. கிழித்து ஒட்டப்பட்ட, நெப்போலியன் பெயர் அழிக்கப்பட்டு வேறு அர்ப்பணிப்புடன் எழுதப்பட்ட அந்த இசைக்கோர்வையின் படத்தை இணையத்தில் இப்போதும் பார்க்கலாம்.
பீத்தோவனின் SYMPHONY – EROICA. சுப.வீ.யின் SYMPHONY திராவிடம்! தாங்கள் நம்பும் உண்மைக்கு வலிமை சேர்க்கும் என்று நம்பி எழுதப்பட்டு, இல்லை என்றானபின் அடித்து எழுதப்பட்டவை பெயர்கள் மட்டும்தான். SYMPHONYகள் அப்படியே இருக்கின்றன. அடிநாதமாக இருக்கும் இசையை விளங்கிக் கொள்ளத் தெரியாமல், நெப்போலியன்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டால் அது சுபவீயின் குறைபாடு அல்ல; செவிகளின் குறைபாடு.
இங்கே உழைப்பு என்பது என்ன, எவர் உழைப்பாளி, எதற்காக உழைக்கிறார் என்பவையெல்லாம் மக்களின் பொதுப் புத்தியில்(COMMON SENSE) தவறாகவே பதிக்கப்பட்டிக்கிறது. அல்லது கிராம்சி சொல்வது போல் அதிகார வர்க்கத்திற்கு ஏற்பப் பதிக்கப்பட்டிருக்கிறது. அரவிந்தரின் 150ஆவது பிறந்த நாளை ‘இந்து’ முகாம் கோலாகலமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நாட்டுக்காக ‘அயராது உழைத்த’ வீரர் என்று சொல்லப்படுகிறது. தன் ஏழாவது வயதிலிருந்து இருபத்தியோராவது வயது வரை இங்கிலாந்தில் இருந்த அவர், 1907இல் இந்தியா வந்து திலகரோடு சேர்ந்து ‘புரட்சிகர’ அரசியல் செய்கிறார். அவர் செய்த புரட்சி, கட்டுரை ஒன்று எழுதியது. அதற்காக ஒரு மாதம் கைது செய்யப்படுகிறார். வெளியே வந்த பிறகு, வேறொரு வழக்கிற்காகத் தேடப்படும் வேளையில் எங்கிருந்தோ ஒரு தெய்வீக அசரீரி கேட்கிறது, ‘பாண்டிச்சேரிக்கு போ’ என்று. ‘புரட்சிகர’ அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, பண்டிச்சேரி வந்து பிரெஞ்சு அரசாங்கம் ஒதுக்கிய ஏக்கர் கணக்கான நிலத்தில் ‘ஆன்ம விடுதலை’யைத் தேடத் தொடங்கிவிட்டார். இப்போதும் 'ஆரோவில்' போய்ப் பார்த்தால் தெரியும், என்ன ஒரு SOPHISTICATED ஆன ‘உழைப்பு’ அது என்று.
தன்னுடைய இளம் வயதிலேயே நாக்கில் புற்றுநோய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதற்காக சென்னை மருத்துவக் கல்லூரியில் பெரியாருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அந்த நாக்கை வைத்துக் கொண்டு தான் சாகும் வரைக்கும் சூத்திரப்பட்டமும் பஞ்சமப் பட்டமும் போவதற்காக பேசிக் கொண்டு அலைந்தார். பள்ளியிலிருந்து அழைத்து வருகையில் தன் பிள்ளையின் புத்தகப்பையை ஒரு தகப்பன் எப்படி தூக்கிக் கொண்டு வருவானோ, அப்படி, தன் 93 ஆம் வயதில் மூத்திரச்சட்டியை தூக்கிக் கொண்டு திரிந்தார். ‘என்னை, வயசாயிடுச்சு, ஓய்வு எடுன்னு சொல்றான். ஒரு நாளைக்கு காலையில் இட்டிலி, மத்தியானம் சோறு, கறிக்கொழம்பு, ராத்திரி அரை டஜன் மலைப்பழம், பாலு அவ்வளவையும் தின்னுட்டு, அதுவும் மக்கள் கொடுக்கிற காசில தின்னுட்டு சும்மா இருன்னா எப்படி?’ - பெரியார் கேட்கிறார்.
சுபவீயின் அன்றாட Schedule கேட்டால் நமக்குத் தலைச் சுற்றும். ‘காலை கலைஞர் டிவி படப்பிடிப்பு, நோன்பில் கருஞ்சட்டை அலுவலகம், மாலை திருமண வரவேற்பு, இரவு ராயபுரம் கலந்துரையாடல், பின் தேனாம்பேட்டை பொதுக்கூட்டம்’ என்பார். நாளை எங்கே என்று கேட்டால் எந்தச் சலனமும் இல்லாமல் சொல்வார், ‘தென் கொரியாவில் இலக்கியக் கூட்டம்’ பொருளாதாயத்திற்கும் புகழுக்கும் ஆன்மீகத் தேடலுக்கும் ஓடுகிற ஒருவரால் இப்படி உழைக்க முடியாது. அதற்கு ஒரு உந்துதல் (drive) வேண்டும். பெரியாரிடம் இருந்த உந்துதல். தன் சமூகத்திற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் தந்துவிட்டுப் போக வேண்டும்; சலனமற்றுக் கிடக்கும் மனங்களில் ஓர் அசைவை ஏற்படுத்தியே ஆக வேண்டும் என்ற பேரவாவின் வழியாக எழும் உந்துதல்!
அவரை நான் மிகவும் மதிப்பதற்கு முக்கியமானக் காரணம் ஒன்று இருக்கிறது. நவீனத்தை அவர் உள்வாங்கியிருக்கும் நேர்த்தி. அவருடைய எழுத்திலோ, பேச்சிலோ எந்த இடத்திலும் ‘கிராமங்கள்’, ‘பாரம்பரியம்’ போன்ற பெருமைகள் தலை காட்டாது
உலகின் மிக அழகான அனுபவங்களில் ஒன்று அதிகாலையில் தூங்குவது. அப்படி ஓர் அழகு இருப்பது சுபவீக்குத் தெரியாது. நாமெல்லாம் கடிகாரம் அழைத்த பிறகு எழுந்து நம்மை சரி செய்து கொள்வோம். எனக்குத் தெரிய தான் எழுந்த பிறகு தன் கைக் கடிகாரத்தைச் சரி செய்து கொள்பவர் சுபவீ அடுத்த முறை அவருடைய ஒரு நிமிடச் செய்தியைக் கேட்பதற்கு முன் அது அனுப்பப்பட்ட நேரத்தைப் பாருங்கள். செய்தியோடு சேர்ந்து கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையும் உள்ளே போகும். பைபிளில் ஒரு அழகான PARADOXICAL வசனம் வரும் -“WE ARE HEALED BY HIS WOUNDS” என்று. சுபவீ தன் உறக்கம் தொலைத்து நம்மை விழிக்கச் செய்கிறார்.
அவரை நான் மிகவும் மதிப்பதற்கு முக்கியமானக் காரணம் ஒன்று இருக்கிறது. நவீனத்தை அவர் உள்வாங்கியிருக்கும் நேர்த்தி. அவருடைய எழுத்திலோ, பேச்சிலோ எந்த இடத்திலும் ‘கிராமங்கள்’, ‘பாரம்பரியம்’ போன்ற பெருமைகள் தலை காட்டாது. இங்கே பலர் இருக்கிறார்கள். கிராமங்களில் தான் வானம் நீலமாக இருக்கிறது, மரம் பச்சையாக இருக்கிறது, கொக்கு வெள்ளையாக இருக்கிறது என்று தொடங்கி, கரிசல் காட்டில் பல்லாங்குழி ஆடியது, மாங்காய் அடித்தது, தேங்காய் பொறுக்கியது, மாட்டின் வாலையோ, முறைப் பெண்ணின் ஜடையையோ பிடித்து இழுத்து வீரவிளையாட்டு நடத்தியது என்று ஏ.சி. அறையில் உட்கார்ந்து NOSTALGIAவில் திளைப்பார்கள். கிராமங்களில் காக்கா இருக்கிறது, குருவி இருக்கிறது சரி. அங்கே தானே ஜாதி இருக்கிறது? ஊருக்கு வெளியே சேரியும் இருக்கிறது? சேரிகள் இல்லாத கிராமங்கள் தமிழ்நாட்டின் வரைபடத்தில் எங்கே இருக்கிறது? டாக்டர்.அம்பேத்கர் சொல்வார், 'What is a village but Sink of localism a den of ignorance and narrow- mindedness'
இன்று தமிழர்களால் வியந்து பேசப்படும் பாரம்பரிய உணவு, திருவிழாக்கள், சடங்குகள் அனைத்தையும் இழை இழையாகப் பிரித்துப் பார்த்தால் இறுதியில் ஜாதி மட்டுமே மிச்சப்பட்டு நிற்கும் என்ற தெளிவு சுபவீக்கு உண்டு. தடுப்பூசி என்பது பன்னாட்டுச் சதி, கொரோனா பற்றி திருமூலர் பேசியிருக்கிறார், கபசுரக் குடிநீருக்காக ஜோபைடன் காத்துக் கிடக்கிறார் என்பது போன்ற ‘தொல்குடி’ பெருமைகளை ஒதுக்கித் தள்ளும் துணிவு அவருக்கு உண்டு. MODERN SCEINTIFIC MEDICINEன் காதலர் அவர். பெரியாரும் லூயிஸ் பாஸ்ட்சரும் எந்தப் புள்ளியில் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்.
‘புஷ்பக விமானம் தான் AEROPLANEஆக மாறியது, ராமனின் அம்பு தான் ஏவுகணை ஆகியது போன்றவைகளையே அறிவியல் அறிவாகவும் தட்டச்சு எந்திரத்தையே அதி தொழில் நுட்பமாகவும் எண்ணி வியந்து கொண்டிருந்த தலைவர்கள் இருந்த ஊரில், 1965 ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரிக்கு புதிதாக ஒரு கருவி வருகிறது. அது IBM1620 வகை கம்ப்யூட்டர். பல பேராசிரியர்களே கம்ப்யூட்டர் என்பதை அதுவரை பார்த்திராத அந்த காலக்கட்டத்தில், பெரியார் கிண்டிக்கு வந்து அந்த கம்ப்யூட்டரைக் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். அப்போது அவருக்கு வயது 86. படியேற முடியாததால் அவரை நாற்காலியில் உட்கார வைத்துத் தூக்கி செல்கிறார்கள்.
Computer பற்றி தனக்கு சொல்லப்பட்ட விளக்கங்களையெல்லாம் ஆர்வமாகக் கேட்ட அவர் ‘இந்த அட்டை (PUNCH CARD)யிலிருந்து தகவலெல்லாம் எப்படி கம்ப்யூட்டருக்குப் போகிறது?’ என்று கூடுதல் வினா எழுப்பி விளக்கம் பெறுகிறார். நடுவில் தன்னுடன் வந்தவரிடம் கம்யூட்டருக்குத் தமிழில் என்ன என்று கேட்கிறார். அவர் பதில் தெரியாமல் தயங்கியவுடன், தனக்கு மிகவும் பிடித்த வசைச் சொல் ஒன்றை பயன்படுத்திவிட்டுச் சொன்னார், ‘நீ கம்ப்யூட்டரை கண்டுபிடிச்சிருந்தா தானே அதுக்கு பேரு இருக்கும்.’ நாளை தன் சூத்திர, பஞ்சமப் பிள்ளைகளின் எதிர்காலத்தை மாற்றியமைக்கப் போகும் அந்தக் கருவியை பார்த்தே ஆக வேண்டும் என்ற அந்த பிடிவாதத்தை ‘என்ன ஒரு தொலைநோக்கு’ என்று வியந்து கடந்து போய்விட முடியாது. பிறக்கப் போகும் பிள்ளையின் எதிர்காலத்தை அது கருவில் இருக்கும் போதே கனவு காணும் தாயை வியந்து பார்ப்பதற்கு எதுவுமில்லை. அது தான் தாய். அது தான் பெரியார்.
ஒரு வேளை, 100 ஆண்டு கழித்து மரித்தவர்கள் எல்லாம் பேச முடியும் என்பதாக ஒரு TECHNOLOGY கண்டுபிடிக்கப்பட்டால், அப்போதும் நம் பேரப்பிள்ளைகள் அந்த திராவிடக் குரலைக் கேட்பார்கள்: ‘வணக்கம். 'நான் சுப.வீரபாண்டியன்!
சுபவீ தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருப்பார். அவர் ஒரு TECH SAVVY மனிதர். தான் சொல்ல வந்த கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதற்காக அனைத்து MEDIUMகளையும் தன் வயப்படுத்திக் கொள்வார். FACEBOOK, TWITTER, WHATSAPP, TELEGRAM எல்லாம் அவரை மனதில் கொண்டே கண்டுபிடிக்கப்பட்ட APPகள். ஒரு வேளை, 100 ஆண்டு கழித்து மரித்தவர்கள் எல்லாம் பேச முடியும் என்பதாக ஒரு TECHNOLOGY கண்டுபிடிக்கப்பட்டால், அப்போதும் நம் பேரப்பிள்ளைகள் அந்த திராவிடக் குரலைக் கேட்பார்கள்: ‘வணக்கம். 'நான் சுப.வீரபாண்டியன்!’
மோனோலிசாவின் படம் உலகம் முழுக்க சிலாகிக்கப்படுகிறது. அந்த புன்னகைக்குப் பின் ஒரு மர்மம் இருக்கிறது, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒவ்வொரு அர்த்தத்தை தருகிறது என்பார்கள். உலகம் மோனோலிசாவை வியந்து பார்க்கலாம். நாம் ஒவ்வொரு நாளும் வியந்து பார்ப்பதற்கு ஒரு படம் இருக்கிறது. டாக்டர்.அம்பேத்கரும் பெரியாரும் அருகருகே அமர்ந்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருக்கும் படம் டாக்டர்.அம்பேத்கர் சிரிப்பது போல் இருக்கும் படங்கள் மிகவும் அரிது. அதுவும் இதுபோல் வாய்விட்டுச் சிரிப்பது அரிதினும் அரிது. படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஒரு சிந்தனை எழும், ‘அப்படி என்ன சொல்லி சிரித்துக் கொள்கிறார்கள்?’ எதைச் சொல்லி சிரித்துக் கொள்கிறார்கள்?’
இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தி நடத்திய உண்ணாவிரத நாடகத்தை நினைத்தா? சுயராஜ்யம் வந்தால் எல்லாம் வந்துவிடும் என்று சொல்கிறார்களே என்பதை நினைத்தா? ராஜாஜியை நினைத்தா? எதுவானாலும் இருவரில் ஒருவர்தான் அப்படிச் சிரிக்கும் அளவுக்கான நகைச்சுவையைச் சொல்லியிருக்க வேண்டும். நான் எப்போதும் முடிவுக்கு வருவது, அந்தக் குறும்புக்கார கிழவன் தான் எதையோ சொல்ல, இருவரும் சிரித்திருக்க வேண்டும். பெரியாரின் நகைச்சுவை அலாதியானது. குறிப்பாகக் கடவுளர் கதைகளை சொல்வதற்கு அவர் பயன்படுத்தும் மொழியும், RHYTHMம், சில TONGUE IN CHEEK வர்ணனைகளும் உலகத்தரம் வாய்ந்தவை.
சுபவீயிடம் SENSE OF HUMOUR கொடி கட்டிப் பறக்கும். அதுவும், அவருடைய வகுப்பு தோழர் செம்பை சேவியர், அல்லது வவுனியன், தமிழன்பன் ஆகியோர் சேர்ந்துவிட்டால், சிரிப்பில் அந்த இடமே வெடித்துச் சிதறிவிடும். அவருடைய நகைச்சுவை ரொம்ப SHARP அதே நேரத்தில் SUBTLE ஆக இருக்கும். எங்களுடைய 'பொடா' சிறைவாசம் நீடித்துக் கொண்டே போகிறது. நீதிமன்றம் பிணை வழக்கை விசாரிக்க மறுக்கிறது. எல்லோரும் சோர்ந்து விட்டோம். ஒரு நாள், நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது என்று செய்தி வருகிறது. சுபவீ சொன்னார், ‘ஒரு வழியாக நம் சிறைவாசம் அதன் ‘வால்’ பகுதிக்கு வந்துவிட்டது’. எல்லோரும் நிம்மதியாகப் பெருமூச்சு விட்டோம். ஒரு PAUSE விட்டு சொன்னார், ‘வால் எவ்வளவு நீளம் என்று தான் தெரியவில்லை’.
மற்றொரு நாள் வேறொரு செய்தி வந்தது, எங்கள் பிணை நீதிமன்றத்தால் மறுக்கப்பட்டு விட்டது. அவ்வளவுதான், நம் வாழ்க்கை இங்கேயே முடியப் போகிறது என்று சோகத்தில் உட்கார்ந்திருந்தோம். நான் மட்டும் சுபவீயிடம் மெதுவாகச் சென்று, ‘எல்லாவற்றையும் நீதிமன்றம் மறுத்துவிட்டது, இனி மேல்முறையீடு செய்வதற்கு WHAT GROUNDS DO WE HAVE’ என்று கேட்டேன். சலிப்போடு சொன்னார், ‘BURIAL GROUNDS’! ஒரு முறை நீதிமன்றத்தில் அவர் ஏதோ சொல்ல, நான் சிரிக்க, நீதிபதி ‘THIS IS COURT’ என்று எச்சரித்ததும், அருகில் இருந்த நெடுமாறன் அய்யா முறைத்ததும் நினைவில் இருக்கிறது. 'பொடா' நாட்களை மகிழ்ச்சியான நாட்களாக ஆக்கியவர் சுப.வீ. சில நேரங்களில், அவரோடு இன்னொரு முறை ‘உள்ளே’ போக மாட்டோமா என்று ஏங்குவதுண்டு. என்ன செய்வது புரட்சித் தலைவி தான் போய்விட்டாரே!
பொது வாழ்வை ஏற்றுக் கொண்டவர்களுக்கான தகுதி, தம்மைச் சுற்றியிருக்கும் வெளியை (SPACE), ஒத்த கருத்துடையவர்களுக்கு ஒதுக்குகிறார்களோ இல்லையோ எதிர் கருத்துடையோர்க்கு ஒதுக்கியே ஆக வேண்டும். ஆனால் இங்கே சூழல் அப்படி இல்லை. முன்பாவது ‘அவர்கள்’ தான் நாம் ஏதாவது சொல்லிவிட்டால் ‘என் மதத்தைக் காயப்படுத்திவிட்டான்; கடவுளை பிராண்டி விட்டான்’ என்று கூச்சலிடுவார்கள். இப்போது நம்மவர்களும் அதையே செய்கிறார்கள். இங்கிலாந்தில் அரச பரம்பரையை எதிர்த்துப் பேசினால் கூட மன்னித்து விட்டு விடுவார்கள், இங்கே ‘சார்பட்டா பரம்பரை’யை எதிர்த்துப் பேசினால் அவ்வளவு தான். பிரித்து மேய்ந்து விடுவார்கள். படம் எனக்கு பிடிக்கவில்லை என்பதைக் கூட BOMB வைக்கப் போகிறேன் என்பதைச் சொல்வது போல ‘குசுகுசு’வென்று தான் சொல்ல வேண்டி இருக்கிறது.
தன் மீது ஒற்றைச் செருப்பை வீசிவிட்டு போனவனைப் பார்த்து பெரியார் கோபப்படுகிறார், ‘இன்னொன்றையும் எறிந்திருந்தால் காலில் போட்டு நடந்திருப்பேனே’. பெரியார் மீதாவது எதிரிதான் எறிந்தான். சுபவீபார்த்து, ‘உன் இடுப்புக்குக் கீழே இருப்பதுதான் கால், அதற்கு செருப்பு போடு’ என்று சொல்லிக் கொடுக்கப்பட்டவர்களே அவர் மீது எறிந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ‘தோழர்’ ஒருவர் மேடையில் தரக் குறைவாகப் பேசியதைக் கேட்டு, சுபவீ வருத்தப்படுவாரோ என்று தயங்கித் தயங்கி அவரைப் பார்த்தேன், ‘விடுங்கள் அவர் அவ்வளவுதான்’ என்று மிக அழகாக, தன் எம்.ஜி.ஆர். முடியை ஒதுக்கிக் கொள்வதைப் போல் தள்ளிவிட்டுப் போனார். பிரச்சனை என்னவென்றால் நாளையே அந்தத் ‘தோழரை’ சந்திக்க நேர்ந்தாலும், செம்புலப் பெயல் நீர் போல தான் கலந்து பேசிக் கொண்டிருப்பார். நமக்கு தான் பற்றிக் கொண்டு வரும்.
நானும் அவரிடம் என்னுடைய எதிர்க் கருத்துகளை வெளிப்படுத்தி இருக்கிறேன், கோபப்பட்டு இருக்கிறேன். அவர் உயரத்திற்கு ஒவ்வாத DWARFகளோடு தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொண்டு அவைகள் ஒன்றோடு ஒன்று கத்திக் கொண்டு இருக்கும் போது என்ன செய்வது என்று தெரியாமல் மீசையை தடவிக் கொண்டு இருப்பதற்கு, தன்னைத் தானே நன்றாகத் தட்டிக் கொண்டு பாராட்டத் தெரிந்த கவிஞர் வைரமுத்துவை போதாது நானும் தட்டுவேன் என்று அளவுக்கு மீறி பாராட்டுவதற்கு, பாண்டேவையும் சீமானையும் தோழர் மணியரசனையும் வேறு வேறு மனிதர்கள் என்று வெள்ளந்தியாக நினைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாகப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதற்கு, இப்படி நிறைய.
எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. 2003, டிசம்பர் 22 அன்று தான் சுப.வீ. கருப்புச் சட்டையைத் தொடர்ந்து அணிய ஆரம்பித்த முதல் நாள். (அதற்கு முன் கலர் கலராக அணிவார்) நாங்கள் ‘பொடா’ சிறையிலிருந்து வெளியே வந்த நாள். வெளியே போகும் போது என்ன உடையில் போகலாம் என்று உள்ளே விவாதித்தோம். ‘பொடா’ எங்களைக் கலைத்து விடவில்லை என்று உணர்த்தும் விதமாக கருப்பில் போவோம் என்று முடிவு செய்தோம். சுப.வீ.க்கு வசந்தா அக்கா அவர் எப்போதும் அணியும் அரைக்கைச் சட்டையையும் எனக்கு வனிதா நான் எப்போதும் அணியும் முழுக்கைச் சட்டையையும் வாங்கி வந்தார்கள். TRAGEDY என்னவென்றால் எனக்கு வாங்கிய சட்டையை அளவில் பெரியதாகவும், அவருக்கு வாங்கிய சட்டையைச் சிறியதாகவும் வாங்கி வந்து விட்டார்கள். ஒன்றரை வருட பொடா சிறைவாசம் இரண்டு காதல் மனைவிகளை அவ்வளவு UNROMANTIC ஆக்கிவிட்டது! நாங்கள் சட்டைகளை மாற்றிக் கொண்டோம். இப்போதும் அந்த புகைப்படத்தில் நான் அரைக் கையோடும் அவர் முழுக் கையோடும் இருப்பதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும். ஆனால் அதை நான் வேறு வகையாக விளங்கிக் கொள்கிறேன். ஒப்பிடுகையில் நான் ‘அரை’தான். அவர் ‘முழுமை’. இந்த அரைக் கை ஒரு நாள் முழுக் கையாக ஆகும் என்ற ஆர்வத்தோடும் நம்பிக்கையோடும் தொடர்ந்து பயணிக்கிறேன். பயணம் என்னுடையது. பாதை சுப.வீ.யுடையது. பெரியாருடையது.
வெங்காயம் செப்டம்பர்2021
Lovely article Dr.Thayappan. I can see the love , affection and respect you have for subavee iyya.
ReplyDeleteஅருமையான அனுபவங்கள்.வரலாற்றில் இடம் பிடித்த செய்திகள்.தங்களுக்கும், சுப.வீ ஐயா அவர்களுக்கும் எனது அன்பும்,வாழ்த்தும். நன்றி
ReplyDeleteஎம்.சோலை
பாமரர்களையும் பகுத்தறிவுப் பாதைக்குத் திருப்பினார் பெரியார்
ReplyDeleteபடித்த இளைஞர்களைப் பகுத்தறிவுப் பாதைக்கு மடைமாற்றம் செய்துகொண்டே இருக்கிறார் சுபவீ.
அருமையான நினைவலைகள்
இனிமையான இயல்பான மொழிநடை......
வாழ்த்துகள் தோழர்
Post a Comment